இந்திய-பிஹார் எல்லையில் நதிக்கரையோரங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை பிஹார் மாநிலம் மேற்கொள்வதற்கு இடையூறு செய்யும் விதமாக தடுப்புகளை நேபாளம் அமைத்திருப்பதாக பிஹார் அரசு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
சில இந்தியப் பகுதிகளுக்கு நேபாளம் உரிமை கோரி புதிய வரைபடங்களையெல்லாம் வெளியிட்டு இந்தியாவுக்கு சவால் அளிக்கும் நேரத்தில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
நேபாள்-இந்திய எல்லையில் நதிக்கரைகளை வலுப்படுத்தி தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் நுழையாமல் தடுக்கும் பணிகள் இதனால் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பிஹார் குற்றம் சாட்டியுள்ளதோடு, இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தை நாட முடிவு எடுத்துள்ளது.
பிஹார் நீராதார அமைச்சர் சஞ்சய் குமார் ஜா, திங்களன்று கூறுகையில், “வால்மீகி நகரில் உள்ள காண்டக் அணைக்கு 36 மதகுகள் உள்ளன. இதில் 18 கதவுகள் நேபாள் பக்கத்தில் உள்ளன. அங்கு நேபாள் தடுப்புகளை அமைத்துள்ளது, இதற்கு முன்னால் இப்படி நடந்ததில்லை. நேற்று கூட 1.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து வெள்ளத்தடுப்பு பொருட்கள், அதிகாரிகள் செல்ல முடியவில்லை எனில் வெள்ளத்தடுப்பு பணிகள் தடைபட்டால் பெரிய ஆபத்து உள்ளது.
இதே போல் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் லால்பகேயா நதியின் கரையிலும் பழுது வேலைகளை நேபாளம் தடுத்து வருகிறது. இது மனிதர்கள் அல்லாத பகுதி, இந்த அணை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு வரை பழுது வேலைகள் தடையின்றி நடந்தன. இந்த முறை அவர்கள் செய்ய அனுமதி மறுக்கின்றனர். கமலா நதியிலும் பழுது வேலைகளை அவர்கள் அனுமதிக்காமல் தடுக்கின்றனர்.
உள்ளூர் பொறியாளர்கள், மேஜிஸ்ட்ரேட் மட்டத்தில் நேபாள அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட கோருகிறோம்.
இந்த விவகாரத்தை உடனடியாகத் தலையிட்டு சரிசெய்யவில்லை எனில் மழைக்காலங்களில் பிஹாரின் பெரும்பகுதிகள் வெள்ளக்காடாகி விடும்? என்று கவலையுடன் தெரிவித்தார்.