இந்தியா

 2 போர்களில் ஈடுபட்டுள்ளோம்; எதையும் அரசியலாக்காதீர்கள்: கேஜ்ரிவால் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நமது நாடு தற்போது 2 போர்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளது, எதையும் அரசியலாக்கக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வருவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக வருவதற்கு 8 நாட்கள் எடுத்தநிலையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்தை 6 நாட்களில் எட்டியது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கரோனா ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
நமது நாடு தற்போது 2 போர்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஒன்று சீனாவில இருந்து வந்த கரோனா வைரஸுக்கு எதிரான போர். மற்றொன்று எல்லையில் உள்ள சீன வீரர்களுக்கு எதிராக நமது வீரர்கள் நடத்தி வரும் போர். இந்த இரண்டு போர்களிலும் நாம் வெல்ல வேண்டுமென்றால் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்.

எதையும் அரசியலாக்கக்கூடாது. நமது வீரர்களை சோர்விழக்கச் செய்யக்கூடாது. நாம் வெற்றி பெறும் வரை ஒருவரையொருவர் விமர்சிப்பதையும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT