நமது ராணுவத்தைப் புண்படுத்துவதையும், அவர்களின் வீரத்தைக் கேள்வி கேட்பதையும் காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக முதல் முறையாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி அறிவிப்புகளை வெளியிடும்போது வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதன் விளைவுகளையும், தேசப் பாதுகாப்பு, எல்லைப்புற நலன் ஆகியவற்றை மனதில் வைத்துப் பேச வேண்டும். ராஜதந்திரம், தீர்க்கமான தலைமை என்பது தவறான தகவல் தருவதில் இல்லை என்பதை நாங்கள் அரசுக்கு நினைவூட்டுகிறோம்.
சீனாவின் தாக்குதலில் எல்லையைக் காக்கும் சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த கர்னல் பி.சந்தோஷ் பாபு, மற்றும் வீரர்கள் உயிர்த்தியாகத்துக்கு நீதியை உறுதி செய்யவேண்டும் என பிரதமரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்குக் குறைவாக ஏதேனும் செய்வது மக்களின் நம்பிக்கைக்கு வரலாற்றுத் துரோகமாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சியும் இந்திய ராணுவத்தைப் புண்படுத்துவதையும், அவர்களின் வீரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நேரங்களில் தேசத்தின் ஒற்றுமை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.
மன்மோகன் சிங் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, சீனாவிடம் இந்தியாவின் 43 ஆயிரம் கி.மீ. எல்லைப் பகுதியைத் தாரை வார்த்துக் கொடுத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எந்தவிதமான ராஜதந்திர நடவடிக்கையும், போரும் இல்லாமல் எல்லைப் பகுதியை சீனாவிடம் ஒப்படைத்தது. மீண்டும் மீண்டும் நமது படைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
சீன நடவடிக்கைகளைப் பற்றி மன்மோகன் சிங் கவலைப்பட வேண்டுமானால் ஒரு விஷயதுக்காக மட்டுமே கவலைப்பட வேண்டும் என விரும்புகிறேன். அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துச் சரணடைந்தார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை சீனா 600 முறை ஊடுருவல்களில் ஈடுபட்டது. இதற்காகத்தான் கவலைப்பட வேண்டும்
மன்மோகன் சிங் அறிக்கை என்பது வார்த்தை ஜாலம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் நடத்தை, செயல்பாடு வருத்தமாக இருக்கிறது.
இதுபோன்ற எந்த அறிக்கையாலும் இந்தியர்களைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்ப வைக்க முடியாது. இதே காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் நமது ராணுவத்தின் திறமையைப் பற்றி கேள்வி கேட்டும், அவர்களை மனச்சோர்வடையச் செய்தும் வருகிறது.
பிரதமர் மோடியை இந்தியா முழுமையாக நம்புகிறது, ஆதரிக்கிறது. 120 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனை, அனுபவத்தை இதுபோன்ற கடினமான நேரத்தில் பார்க்கிறார்கள்.
குறிப்பாக அனைத்தையும் தவிர்த்து, எவ்வாறு தேசத்து நலனைப் பிரதானமாக வைத்துச் செயல்படுகிறார்கள் என்று மக்கள் பார்க்கிறார்கள்''.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.