ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை நாளை பக்தர்கள் இல்லாமல் நடத்தலாம். நூற்றாண்டுகால பழமையான வழக்கம் நிறுத்தப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஓராண்டு ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் நடக்காவிட்டால், 12 ஆண்டுகளுக்கு நடக்காது என்ற நம்பிக்கை இருப்பதால், அதில் தலையீட வேண்டாம் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.
அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா (நாளை) 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.
ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு கரோனா பரவும் நேரத்தில் இந்தத் திருவிழாவை நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு மேலும் கரோனா பரவல் தீவிரமாகும். ஆதலால் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை இந்த ஆண்டு நடத்தத் தடை விதித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து “ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ்” எனும் அமைப்பும், அப்தாப் ஹூசைன் என்பவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, இந்தத் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய தடை உத்தரவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்தச் சூழலில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் தொடர்பாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் மத்திய சொலிசிட்டர் துஷார் மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.
துஷார் மேத்தா கூறுகையில், “பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பழமையான வழக்கம். அதைத் தடுக்க வேண்டாம். கரோனாவைக் காரணம் காட்டி தடை விதிப்பது நம்பிக்கையில் தலையிடுவதாகும்.
பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் பூரி ஜெந்நாதர் கோயில் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கோருகிறது. ஆதலால், கடந்த 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோருகிறோம்.
இது மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. பூரி ஜெகந்நாதர் கோயிலை விட்டு நாளை வெளியே வராவிட்டால், அடுத்து 12 ஆண்டுகளுக்கு வெளியே வரமாட்டார். இது மரபாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு செய்யும், அதற்காக ஊரடங்கு உத்தரவையும் பிறப்பிக்கும்.
தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியில் இருப்போர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் யாருக்கும் கரோனா இல்லை. பூரி நகர மன்னர் மற்றும் கோயில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது’’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, ஒடிசா மாநில அரசின் சார்பில் வழக்கறிஞரும் வரவேற்று தங்களை இணைத்துக் கொண்டார். இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.