இந்தியா

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம்: மோடியின் பேச்சிற்கு சீன ஊடகங்கள் பாராட்டு 

ஆனந்த் கிருஷ்ணா

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பேசிய கருத்துகளை சீன ஊடகங்கள் வரவேற்றுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை பிரதமர் மோடியின், “யாரும் நம் எல்லையில் ஊடுருவவில்லை. இப்போது யாரும் அங்கு இல்லை. நம் இடங்கள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை” என்ற கூற்றை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி ராணுவப்படைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார், மேலும் பிரதமர் மோடி மோதலைத் தணித்துத்தான் தெரிவித்துள்ளார்.

தேசியவாதிகளுக்கும் மற்ற கடின நிலைப்பாட்டு வாதிகளுக்கும் கடினமான நிலைப்பாடு எடுத்து பேசியுள்ளார், ஆனால் சீனாவுடன் மேலும் மோதல் வைத்துக் கொள்ள முடியாது என்பதை மோடி புரிந்து வைத்துள்ளார், அதனால்தான் பதற்றங்களைத் தணிக்க அவர் முயற்சி செய்கிறார்” என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஷாங்காய் தெற்காசிய ஆய்வு மைய பல்கலைக் கழகப் பேராசிரியர் லின் மின்வாங் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் கூறும்போது, “மோடியின் கருத்து பதற்றத்தைத் தணிக்க உதவும். இந்தியாவின் பிரதமராக பிரச்சினையைத் தீவிரப்படுத்துபவர்கள் சீனாவைக் குற்றம்சாட்டுவதை அவர் தன் பதற்றத் தணிப்புக் கூற்றின் மூலம் அகற்றியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

ராணுவ நிபுணர் வெய்டாங்சூ என்பவர் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதான மோடியின் பேச்சு தனது உள்நாட்டு மக்களை திருப்தி செய்வதற்காகவும் இந்திய ராணுவத்தை ஊக்கப்படுத்தவும் கூறப்பட்டதாக தெரிகிறது என்றார், இந்தியா பிற அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்டவைகளுடன் வேறுபாடு கொள்ளும் போது தேசியவாதம் அதன் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. ஆனால் சீனா என்று வரும்போது இது வேறு கதையாக உள்ளது, என்றார்.

மேலும் சீன ராணுவத்தினர் 40 பேர் பலி என்று கூறப்படும் செய்திகளைப் பற்றி வெய்டாங்சூ கூறும்போது, சீனாவுக்கு எதிராக தீவிர நிலைப்பாடு உள்ளவர்களையும் கடுமை தேசியவாதிகளையும் திருப்தி செய்ய இவ்வாறு கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு குளோபல் டைம்ஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT