இந்தியா

பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு - பாஜக 160, எல்ஜேபி 40, ஆர்எஸ்எல்பி 23, எச்ஏஎம் 20

பிடிஐ

பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளிடையே நேற்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி பாஜக 160, எல்ஜேபி 40, ஆர்எஸ்எல்பி 23, எச்ஏஎம் 20 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, எல்ஜேபி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமித் ஷா கூறியதாவது:

சுமார் ரூ.12 லட்சம் கோடி ஊழலில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிதிஷ் குமார், ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப் போவதாகக் கூறுகிறார். இதுபோல, காட்டாட்சிக்கு பெயர் பெற்ற லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு குற்றமற்ற மாநிலமாக மாற்றப் போவதாக அவர் வாக்குறுதி அளித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

பிஹார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்காக பிரதமருக்கு மாநில முதல்வரான நிதிஷ் நன்றிகூட தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி, நிதிஷின் ஜேடியு ஆகிய 3 கட்சிகளுக்கும் மாநிலத்தை ஆள வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள் (பொதுமக்கள்). இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக் கனவை நனவாக்குவோம்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றில் 2 பங்கு இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

SCROLL FOR NEXT