பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடியையும் ராணுவத்தையும் கிண்டல் செய்த கவுன்சிலர் கைது; சஸ்பெண்ட் செய்து லடாக் நிர்வாகம் அதிரடி

பிடிஐ

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், ராணுவத்தையும் கிண்டல் செய்து ஆடியோ வெளியிட்ட கார்கில் நகர கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

இந்தச் சம்பவத்தில் இந்திய ராணுவத்தையும், பிரதமர் மோடியையும் அவதூறு செய்யும் வகையில் கிண்டல் செய்து லடாக்கின், ஷாகர் தொகுதி கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இந்த ஆடியோவுக்குக் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதையடுத்து, கார்கில் நகரில் நேற்று லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டு நிர்வாக கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) தலைவர் பெரோஸ் அகமது கான் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிரதமரையும், ராணுவத்தையும் அவதூறாகப் பேசிய கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி கவுன்சிலர் ஜாகீர் ஹுசேனை சஸ்பெண்ட் செய்யவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், லடாக்கில் நடந்த சம்பவங்களின் உண்மை அறியாமல் இதுபோல் தனிநபர்கள் தன்னிச்சையாக ஆடியோ வெளியிடுவதும், உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் மீது போலீஸில் புகார் அளிக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் ஜாகீர் ஹுசேன் இருந்து வந்தார். பிரதமர் மோடியையும், ராணுவத்தையும் அவதூறாகப் பேசிய செயலால் காங்கிரஸ் கட்சியும் ஜாகீர் ஹுசேனைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) பரிந்துரையின் அடிப்படையில் கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று இரவு கார்கில் நகரில் இருக்கும் கவுன்சிலர் ஜாகீர் ஹுசேன் இல்லத்தை போலீஸார் சோதனையிட்டு, அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ கேசட்டையும் பறிமுதல் செய்து அவரை அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரதமர் மோடியையும், ராணுவத்தையும் கிண்டல் செய்து பேசியது அவர்தான் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இது தொடர்பாக லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) வெளியிட்ட அறிக்கையில், “கார்கில் மக்கள் எப்போதும் தேசப்பற்றுடன் நடந்து கொள்ளக் கூடியவர்கள். கார்கில் மக்களின் தேசப்பற்றை நிரூபிக்க எந்த ஊடகத்துக்கும் சான்று அளிக்க வேண்டியதில்லை. கடந்த 1948, 1971, 1999 ஆம் ஆண்டுகளில் ராணுவத்துக்கு துணையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டனர். எல்லை காக்கும் ராணுவத்துக்கும் பொறுப்புணர்வோடு கார்கில் மக்களும் செயல்பட்டு தேசப்பற்றை விளக்கியுள்ளார்கள். இந்த தேசப்பற்று எதிர்காலத்திலும் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT