மாநிலங்களவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக 43 பேர் எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளனர். 72 சதவீதக் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மாநிலங்களவை ஆய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவையில் காலியான 55 இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், 55 இடங்களில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நேற்று முன்தினம் 8 மாநிலங்களில் நடத்தப்பட்டது.
இதில் 19 இடங்களில் 8 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 4 இடங்களைப் பிடித்தன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றன.
ஒட்டுமொத்தமாக 55 இடங்களில் இதுவரை பாஜக 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 9 இடங்கள், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், திமுக, அதிமுக தலா 3 இடங்கள், பிஜூ ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் தலா 4 இடங்கள், என்சிபி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், டிஆர்எஸ் தலா 2 இடங்கள் மற்ற கட்சிகள் மற்ற இடங்களைப் பிடித்துள்ளன என்று மாநிலங்களவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவையில் ஓய்வுபெற்றுச் சென்ற எம்.பி.க்களில் 12 பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.பியாகத் தேர்வாகியுள்ளனர். இந்த 12 பேரில் 7 பேர் மட்டும் அதிகமான முறை எம்.பி.யாக மாநிலங்களவையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மாநிலங்களவையில் பணியாற்றிய எம்.பி.க்கள் அனுபவங்களின் எண்ணிக்கை என்பது தற்போது 63 ஆகக் குறைந்துள்ளது என்று மாநிலங்களவை ஆய்வுப்பிரிவு தெரிவிக்கிறது.
மாநிலங்களவையில் 20 மாநிலங்களுக்கான காலியான 61 இடங்களில் 42 பேர் எந்தவிதமான போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த 42 பேரில் 28 பேர் முதல் முறையாக மாநிலங்களவைக்கு எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 19 இடங்களுக்காக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 15 பேர் முதல் முறையாக எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளனர்.
ஓய்வுபெற்ற 61 எம்.பி.க்களின் ஒட்டுமொத்த மாநிலங்களவை அனுபவம் என்பது 95 முறையாகும். அதாவது இந்த 61 எம்.பி.க்களும் ஒரு முறையிலிருந்து அதிகபட்சமாக 4 முறை வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.க்களின் அனுபவத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கை என்பது 32 முறைதான். அவையில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்கள் அனுபவம் என்பது 63 முறையாகக் குறைந்துள்ளது. அதாவது மாநிலங்களவையில் உள்ள எம்.பிக்கள் அனைவரும் எத்தனை முறை தேர்வாகியுள்ளார்கள் என்பதைக் கணக்கிட்டால் 63 முறை மட்டும்தான். இது மிகக் குறைவாகும்.
முன்னணித் தலைவர்களான ஜோதிர்ஆதித்யா சிந்தியா, மல்லிகார்ஜூன கார்கே, தம்பிதுரை, கே.சி.வேணுகோபால், கே.ஆர். சுரேஷ் ரெட்டி ஆகியோர் முதல் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர்.
எம்.பி.க்களாக இருந்து வரும், புவனேஷ்வர் கலிதா (5-வதுமுறை), பிரேம்சந்த் குப்தா (5-வதுமுறை), திருச்சி சிவா (4-வது முறை), கே.கேசவ ராவ், பிஸ்வாஜித் டயாமேரி, பரிமல் நாத்வானி (3-வது முறை), சரத் பவார், ராம்தாஸ் அத்வாலே, ஹரிவன்ஸ், திக்விஜய் சிங், கேடிஎஸ் துளசி, ராம்நாத் தாக்கூர் ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
மேலும், ஜி.கே.வாசன், தினேஷ் திரிவேதி, நபம் ரபியா ஆகிய மூவரும் 3-வது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர். தேவகவுடா, சிபு சோரன், ஓம் சிங் லகாவத் ஆகியோர் 2-வது முறையாகத் தேர்வாகியுள்ளனர்.
மாநில வாரியாகப் பார்த்தால், கர்நாடக மாநிலத்தில் ஓய்வுபெற்ற 4 எம்.பி.க்களின் அனுபவம் 9 முறையாகும். புதிதாகத் தேர்வான 4 எம்.பி.க்களின் ஒட்டுமொத்த அனுபவம் தேவகவுடாவின் ஒருமுறை அனுபவம் மட்டும்தான். மற்ற 3 பேரும் புதிதாகத் தேர்வானவர்கள்.
மகாராஷ்டிராவில் ஓய்வுபெற்ற 7 எம்.பி.க்களின் ஒட்டுமொத்த அனுபவம் 10 முறையாகும். இதில் புதிதாகத் தேர்வான எம்.பி.க்களின் அனுபவம் 2 முறை மட்டும்தான். இதில் சரத்பவார், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் அடங்குவர். மற்ற 5 பேரும் புதிதாக மாநிலங்களவைக்குச் செல்கின்றனர்.
ஆந்திராவில் 4 இடங்கள் காலியாகின. அந்த எம்.பி.க்களின் அனுபவம் 6 முறையாகும். தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின. அந்த எம்.பி.க்கள் அனுபவம் 6 முறையாகும். குஜராத்தில் 4 இடங்களில் காலியான எம்.பி.க்களின் அனுபவம் 4 முறை. ஒடிசாவில் 4 முறையாகும்.
இவ்வாறு மாநிலங்களவை ஆய்வுப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.