இந்தியா

40 வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்: இணைய உதவியால் 94 வயதில் வீடு திரும்பினார்

பிடிஐ

40 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஒரு பெண் தற்போது தனது 94 வயதில் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

1979 - 80 ஆம் வருடம், மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் சாலையோரம், பரிதாபமான நிலையில் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறார் ஒரு லாரி ஓட்டுநர். அந்தப் பெண்ணை தேனீக்கள் கடித்திருந்தன. அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை.

ஆனால், அந்தப் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அந்த ஓட்டுநர். அவர்கள் குடும்பத்தோடு அந்தப் பெண் வாழ ஆரம்பித்தார். அந்த லாரி ஓட்டுநரின் மகன் இஸ்ரார் கான் இதுபற்றிக் கூறுகிறார்.

"அவர் என் வீட்டுக்கு வந்தபோது நான் குழந்தை. நாங்கள் அவரை அச்சான் மவுஸி என்று அழைக்க ஆரம்பித்தோம். அவர் மனநிலை சரியில்லை. மராத்தியில் ஏதோ முணுமுணுப்பார். அது எங்களுக்குப் புரியாது. அவரது குடும்பத்தைப் பற்றி சில முறை கேட்டிருக்கிறோம். ஆனால் அவரால் சொல்ல முடியாது.

அவர் கஞ்ச்மா நகர் என்ற இடத்தைப் பற்றிப் பேசுவார். நான் கூகுளில் அந்தப் பெயரைத் தேடினேன். கிடைக்கவில்லை. இவரைப் பற்றி ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தேன். பலனில்லை. பிறகு கடந்த மே 4-ம் தேதி, ஊரடங்கின்போது, மீண்டும் அவரது சொந்த ஊரைப் பற்றி நான் கேட்டேன்.

இம்முறை அவர் பர்ஸாபூர் என்ற இடத்தைப் பற்றிச் சொன்னார். நான் கூகுளில் தேடியபோது அப்படி ஒரு இடம் மகாரஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது. மே 7-ம் தேதி பரஸ்பூரில் கடை வைத்திருக்கும் அபிஷேக் என்பவரை அழைத்து, மவுஸியைப் பற்றிச் சொன்னேன். கிரார் சமூகத்தைச் சேர்ந்த அவர், பக்கத்தில் கஞ்ச்மா நகர் என்ற கிராமம் இருப்பதாகக் கூறினார்.

மே 7 இரவு 8.30 மணிக்கு மவுஸியின் வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அந்த வீடியோவை தனது சமூகத்துடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார். நள்ளிரவு அபிஷேக்கிடமிருந்து அழைப்பு வந்தது. மவுஸியின் அடையாளம் தெரிந்ததென்றும், அவரது உறவினர்கள் இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்றும் கூறினார்" என்று இஸ்ரார் கான் தெரிவித்தார்.

இந்த வீடியோ ப்ருத்வி பையாலால் ஷிங்கானே என்பவருக்கு அனுப்பப்பட்டது. இவர்தான் மவுஸியின் பேரன். நாக்பூரில் வசிக்கிறார். ஷிங்கானே குடும்பத்தினர் இதனால் திகைத்துப் போனார்கள். அவரை உடனடியாக வீட்டுக்கு அழைத்து வர நினைத்தாலும் ஊரடங்கு தளர்வுக்காகக் காத்திருந்தனர். ஜூன் 17-ம் தேதி, ப்ருத்வி தனது பாட்டியை அழைத்துச் சென்றார். அவரது உண்மையான பெயர் பன்ச்ஃபுல்பாய் தேஜ்பால் சிங் ஷிங்கானே.

ஆனால் அவர் வீடு திரும்பியபோது அவரது மகனை அவரால் சந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் 3 வருடங்கள் முன்பே காலமாகிவிட்டார்.

"நாங்கள் கஞ்ச்மா நகர் வாசிகள். கஞ்ச்மா நகர் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இருக்கிறது. ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பம் நாக்பூருக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

1979-ம் ஆண்டு எனது தாத்தா, பாட்டியை கஞ்ச்மா நகரிலிருந்து சிகிச்சைக்காக நாக்பூர் அழைத்து வந்திருந்தார். அவரைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், ஒரு நாள் தனது அப்பா வீட்டுக்குச் செல்கிறேன் என்று கூறி வீட்டை விட்டுச் சென்ற என் பாட்டி அதற்குப் பின் வீடு திரும்பவில்லை.

என் அப்பா பல வருடங்கள் அவரைத் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. என் அப்பா 2017-ம் ஆண்டு காலமானார். மூன்று வருடங்களுக்கு முன்பே என் பாட்டி கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 94 வயதில் என் பாட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இவ்வளவு காலம் அவரைப் பார்த்துக் கொண்ட கான் குடும்பத்தினருக்கு நன்றி" என்று ப்ருத்வி பையாலால் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT