மாநில அரசுகள் சில உத்தரவுகளையும் வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றுவதில்லை என்பதைக் கண்டிக்கும் மத்திய அரசு, கரோனா பரவலைத் தடுக்க களத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது. இது தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மிக மிதமனா மற்றும் கரோனா நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் தெரிவை மேற்கொள்ளலாம். அதாவது நோயாளிக்கு தனி அறை அவசியம். இதில் கழிப்பறை தனியாக இருக்க வேண்டும். இவர்களைக் கவனித்துக் கொள்ள ஒரு நபர் பொறுப்பில் அமர்த்தப்பட வேண்டும்.
மேலும், அவ்வப்போது தங்கள் ஆரோக்கியம் தொடர்பாக கண்காணிக்க, சோதிக்க நோயாளி ஒப்புக் கொள்வது அவசியம், அவ்வப்போது தங்கள் உடல்நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தெரிவிக வெண்டும், அப்போதுதான் கண்காணிப்புக் குழுக்கள் நோயாளியின் நிலையை அடுத்தடுத்து கண்காணிக்க முடியும்.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானது, நோயாளி வீட்டிலேயே இருக்கும் தெரிவை மேற்கொள்ளும் பட்சத்தில் அவரை முழுதும் மருத்துவப் பரிசோதனை செய்து, அவரது வீட்டு நிலைமைகளையும் முழுதும் பரிசீலித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒரு குறிப்பிட்ட நோயாளி வீட்டிலிருந்த படியே சிகிச்சை பெறலாம் என்று அவர் திருப்தி அடைவது அவசியம்.
கூடுதலாக, நோயாளி சுய-தனிமைப்படுத்திக் கொள்வதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து வீட்டு தனிமை வழிமுறைகளைப் பின்பற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
“இந்த விஷயத்தில் வீட்டுத் தனிமையில் அனுமதிகள் சர்வசாதாரணமாக எந்த ஒரு அளவுகோலையும் உறுதி செய்யாமல் சில மாநிலங்களில் வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன, எனவே வழிகாட்டு நெறிமுறைகளை அதன் வார்த்தையிலும் உணர்விலும் கடைப்பிடிப்பது அவசியம்.
கவனமின்மை அலட்சியம் காரணமாக வீட்டுத் தனிமையை கண்டபடி அனுமதித்தால் வீட்டில் உள்ள பிற உறுப்பினர்கள், அண்டை வீட்டார்கள் ஆகியோருக்கும் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் கவனம் அதிகம் தேவை. எனவே மாநில அரசுகள் எந்த ஒரு அளவுகோல்களையும் பார்க்காமல் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது .
சோதனை, தொடர்புத் தடம் காணுதல், பிறகு தனிமைப்படுத்தல் என்ற கொள்கையை நாம் ஒட்டுமொத்தமாக பின்பற்றி வருகிறோம். எனவே வழிகாட்டு நெறிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை எனில் சோதனை, தடம் காணுதல், சிகிச்சை பயனின்றி போய்விடும்.
எனவே மக்கள் தொகை அடர்த்தியான நகரப்பகுதிகளில் வீட்டுத்தனிமை என்பதை அமல்படுத்தினால் இது நோயைப் பரப்புவதில் போய் முடியும். எனவே மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வீட்டுத் தனிமையை முடிவு செய்வது அவசியம்” என்று சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது