நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக, திமுக உட்பட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதேசமயம் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உட்பட நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவில் நடந்த விவகாரம் தொடர்பாகவும், இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். சீனாவின் தாக்குதல் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் தகவல்களை கேட்டனர்
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது எந்த ஒரு
நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.
நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.