கோப்புப் படம் 
இந்தியா

சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு: ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

வருடாந்திர சூரியக் கிரகணம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் ஜுன் 21, 2020 அன்று காலை 10:25 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் நைநிடாலில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான வானியல் கூர்நோக்கு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனமானது 19 ஜுன் 2020 அன்று மாலை 3.:30 மணிக்கு சிறப்புரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேரா. தீபங்கர் பானர்ஜி ‘‘சூரிய கிரகணத்தின் அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் ஜும், யூ டியூப் மற்றும் முகநூல் வழியாக சூரிய கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் வடஇந்தியாவில் காலை 10:25 மணிக்கு தொடங்கி மதியம் 12:08 மணிக்கு அதிகபட்ச அளவை அடைந்து பகல் 01:54 மணிக்கு முடிவடையும்.

ஏ.ஆர்.ஐ.ஈ.எஸ் நிறுவனமானது சூரிய கிரணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய நடைமுறைகளை பட்டியல் இட்டுள்ளது:

செய்யக் கூடியவை:

1. சூரிய கிரணத்தை கண்ணால் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை (ஐ.எஸ்.ஓ சான்றளிக்கப்பட்டது) அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே

பயன்படுத்த வேண்டும். கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

2. வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வைப் பார்ப்பதற்கு, பாதுகாப்பான வழி எதுவெனில் தொலைநோக்கியை பயன்படுத்துதல் அல்லது பின்ஹோல் கேமராவை பயன்படுத்தி திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்த்தல் மட்டுமே ஆகும்.

3. சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம். சூரிய கிரகணம் என்பது கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு காட்சி மட்டுமே ஆகும்.

செய்யக் கூடாதவை:

1. வெறும் கண்களால் நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது.

2. சூரிய கிரகணத்தைப் பார்க்க எக்ஸ்-ரே பிலிமையோ அல்லது சாதாரண சன் கிளாஸையோ (யூவி பாதுகாப்பு இருந்தாலும் கூட) பயன்படுத்தக் கூடாது.

3. சூரிய கிரகணத்தைப் பார்க்க வர்ணம் பூசிய கண்ணாடியையும் பயன்படுத்தக் கூடாது.

4. இந்த சூரிய கிரகணத்தை பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

SCROLL FOR NEXT