கரோனா வைரஸ் தீவிரம், எல்லையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் ஆகிய பிரச்சினைகளால் தன்னுடைய 50-வது பிறந்தநாளை காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று 50-வது பிறந்தநாள். வழக்கமாக காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு எல்லையில் சீன ராணுவத்துடன் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தது, கரோனாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தது, பாதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றால் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்
இதையடுத்து, அனைத்து மாநில, மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்களும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ராகுல் காந்தி பிறந்தநாள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பதிலாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து ஆதரவு அளிக்கலாம்.
முக்கியமாக ஏழை,எளிய மக்ளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி அவர்களின் துயரத்தை துடைக்கலாம்.
மாநில, மாவட்ட அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும், எல்லையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்கள் ஆத்மா சாந்தி அடைய 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி, நாடுமுழுவதும் ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும், ஏழை மக்களுக்கு தேவையான நிதியுவதி வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன