இந்தியா

கேரளாவில் இன்று 97 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் பலி: முதல்வர் பினராய் விஜயன் தகவல்

செய்திப்பிரிவு

கேரளாவில் இன்று 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் வியாழக்கிழமை (இன்று) திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் இன்று 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று கண்ணூரை சேர்ந்த கலால்துறை டிரைவரான 28 வயதான சுனில் என்பவர் கரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், 7 பேர் டெல்லியில் இருந்தும், 5 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், தலா 2 பேர் ஹரியாணா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும், ஒருவர் ஒடிசா மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் குணமடைந்தவர்களில் 9 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 8 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 3 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 10 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 2 பேர் கோட்டயம், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், 22 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 11 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும்,11 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 13 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 11 பேர் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும், 9 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 6 பேர் எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், தலா 5 பேர் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 4,817 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 2,794 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 1,358 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் தற்போது 1,27,231 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,967 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 190 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1, 69,035 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் 3,194 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இதுவரை சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 35,032 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 33,386 பேருக்கு நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் 108 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கரோனா பரிசோதனைக்கு வசதி இல்லாத நாடுகளில் உள்ள மலையாளிகளுக்கு பரிசோதனை நடத்துவதற்காக ட்ரூ நாட் பரிசோதனை கருவிகளை ஏற்பாடு செய்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிறுவனங்களின் உதவியும், இந்திய தூதரகங்களின் உதவியும் இதற்கு தேவையாகும். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் பரிசோதனைக்கு வசதி உள்ளது. ஆனால் சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளில் பரிசோதனை வசதி இல்லை. தற்போது கேரள அரசின் இந்த நடவடிக்கை அந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT