இந்தியா

டெல்லியில் கரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: அமித் ஷா மீண்டும் ஆலோசனை

செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா பரவலை தடுக்க அமித் ஷா தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக மருத்துவமனைகள், பரிசோதனைகள், கரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லியில் கரோனா பரவலை தடுக்க அமித் ஷா தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் டெல்லி மட்டுமின்றி டெல்லியையொட்டியுள்ள அண்டை மாநிலங்களின் பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT