ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் பதவிக்கு இந்தியா அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில நிரந்தரமில்லா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி நிறைவு பெற்ற நாடுகளுக்குப் பதிலாக புதிதாக உறுப்பு நாடுகள் தேர்வாகும். அந்த வகையில் இந்த ஆண்டு 5 இடங்கள் காலியாகின.
ஆப்பிரிக்கா-ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்காக 2 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் டிஜிபோட்டி, இந்தியா, கென்யா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இதில் இந்தியா, கென்யா நாடுகள் வென்றன.
192 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தலில் வெற்றிக்கு மூன்றில் இரு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில் இந்தியாவுக்கு நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவி கிடைக்க 184 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. இதன்படி 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகளுக்கு இந்தியா இந்தப் பதவியில் இருக்கும். இந்தியாவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி தொடங்குகிறது.
இதுவரை 8 முறை உறுப்பினராக இருந்த இந்தியா, கடைசியாக 2012-ம் ஆண்டு இந்த உறுப்பினர் பதவியை வகித்திருந்தது. அதன்பின் கிடைக்கவில்லை. இப்போது 8 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தலில் மீண்டும் இந்தியா உறுப்பினராகத் தேர்வாகியுள்ளது
இந்தியாவை நிரந்தரமில்லா உறுப்பினராக 10 நாடுகளில் ஒருவராகத் தேர்வு செய்தமைக்கு பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராகத் தேர்வு செய்ய பெரும் ஆதரவு அளித்த உலகச் சமூகத்துக்கு இந்தியாவின் சார்பில் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். உலகில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, நீதி ஆகியவற்றை ஊக்குவிக்க உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இந்தியா பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.