இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருவதையடுத்தும் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதையடுத்தும் லடாக் பகுதியில் ஏன் சூழ்நிலை இவ்வளவு வன்முறையாக மாறியது, மோசமாகப் போனதற்குக் காரணம் என்ன என்பதை மத்தியத் தலைமை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கோரிக்கை வைத்துள்ளார்.
‘சீனாவின் கபட’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்தியா சர்வதேச நாடுகளின் உதவியை நாடி சூழ்நிலையை அங்கு அமைதிப்பக்கம் திருப்ப வேண்டும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்
வீர மரணம் எய்திய கலோனல் சந்தோஷ் பாபு மற்றும் வீரர்கள் காட்டிய தைரியம் மிகப்பெரிய விஷயமாகும் என்று கூறிய வீரப்ப மொய்லி, “நாட்டைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு ஒட்டு மொத்த தேசமும் தலைவணங்குகிறது, இவர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது” என்றார் வீரப்ப மொய்லி
எல்லையில் இந்தியா ஒரு இன்ச் இடத்தைக் கூட இழக்கக் கூடாது, யாரும் உயிரையும் இழக்கக் கூடாது என்று கூறும் வீரப்ப மொய்லி, “கடுமையான தாக்குதல் சீன தரப்பிலிருந்து நிகழ்ந்த அன்றைய தினத்தில் கூட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லையில் எந்த வித தாக்குதலும் ஆக்ரோஷமும் இல்லை என்ற பிம்பத்தை அளிக்குமாறு பேசினார். மேலும் இருதரப்பினரிடையேயும் அமைதி நிலவுவதற்கான நடைமுறை சுமுகமாக இருக்கிறது என்பது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார்.
எல்லையில் இப்படிப்பட்ட சீரியஸான நிலவரத்தைக் கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏன் இப்படி மோசமானது என்பதை நாட்டுத்தலைமை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த உச்சக்கட்டத்தை அடைந்ததற்கான காரணத்தை மத்தியத் தலைமை விளக்க வேண்டும்” என்று வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்துள்ளார்.