கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளார்.
காணொலி மூலம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஆனால், மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிகளிடமும் எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை எனக் கோரி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை ட்விட்டரிலும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், “எல்லையில் என்ன நடக்கிறது , ஏன் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். எல்லையில் நடப்பது குறித்து பிரதமர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழைவதற்கும், இந்திய வீரர்களைக் கொல்வதற்கும் எவ்வாறு துணிச்சல் வந்தது” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
வீடியோ மூலம் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “ எல்லையில் சீன-இந்திய ராணுவ மோதல் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்க வேண்டும். தேசத்தின் மக்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். மறைந்திருக்காதீர்கள், வெளியே வந்து மக்களிடம் விளக்கமளியுங்கள்” எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமயைாகச் சாடியிருந்தார். அதில், “ கடந்த 7 வாரங்களாக இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் நடந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி மக்களுக்கு எதையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட பிரதமர், குடியரசுத் தலைவரை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்ததுண்டா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு அழுத்தங்களும், நெருக்கடிகளும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வரத் தொடங்கின. தொடர்ந்து மவுனம் காப்பது பல்வேறு ஊகங்களை எதிர்க்கட்சிகள் மத்தியில் உருவாக்கும், எல்லைப் பாதுகாப்பிலும் பல்வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும் என்று உணர்ந்த மத்திய அரசு வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில், “ இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை (19-ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.