காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

எல்லையில் 20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு ஆழ்ந்த வேதனையையும் வலியும் தருகிறது: சோனியா காந்தி இரங்கல்

பிடிஐ

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிகழ்வு ஆழ்ந்த வேதனையையும், வலியையும் தருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர்.

இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததே தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு செய்யப்பட்டது

இந்நிலையில் கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது

45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சோக நிகழ்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் துணிச்சல் மிகுந்த 20 இந்திய வீரர்கள், அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் எனக்கு ஆழ்ந்த வேதனையையும், வலியையும் ஏற்படுத்துகிறது.

20 வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், வீரர்களின் துணிச்சலுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். நமது எல்லை ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT