மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வியாளரும் சமூக சேவகருமான சாகர் ஜோந்தலே மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக பொது வார்டில் சேர்க்கப்படும் நோயாளியிடம்கூட சுமார் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பார்கள். இதனால் ஏழை மக்கள் சிகிச்சை பெறுவது கடினமாகும். எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் நோய்க்கு இலவசமாக சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி திபங்கர் தத்தா, நீதிபதி கேகே தாதட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் கோரிக்கை முட்டாள்தனமானதாகும். மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு மாதத்தில் அரசிடம் டெபாசிட் செய்ய வேண்டும். மகாராஷ்டிர அரசு மே 21-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை சரியானதுதான்" என கூறப்பட்டுள்ளது.