டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான்.
கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெல்லியில் கரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மத்திய, மாநில அரசுகள் கரம் கோர்த்து கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள சூர்யா ஓட்டல் ஹோலி குடும்ப மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையாக மாற்ற ஓட்டல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.