கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக டெல்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அவருக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ் கிடைத்த இரு நாட்களுக்குள் விசாரணைக்கு வர வேண்டும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜாபருல் கானுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்
டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை ஜபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார். அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து,அதை அவர் நீக்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பும் கோரினார்.
ஆனால், டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீஸில் புகார் அளித்தார். அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு கருத்தை ஜபருல் இஸ்லாம் கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு டெல்லி சிறப்பு போலீஸாரின் சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஜபருல் கான் மீது கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி ஐபிசி பிரிவு 124(ஏ), 153(ஏ) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீஸார் அனுப்பிய நோட்டீஸ் குறித்து ஜபருல் கான் பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸாரின் நோட்டீஸைப் பெற்றுள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக சில விவரங்களைக் கேட்க என்னை அழைத்துள்ளார்கள். சாணக்கியாபுரியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நாளை செல்வேன்” எனத் தெரிவித்தார்
சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜாபருல்கானுக்கு போலீஸார் அனுப்பும் 2-வது நோட்டீஸ் இதுவாகும். கடந்த மே மாதம் இதேபோன்று நோட்டீஸை போலீஸார் அனுப்பிய போது அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை