கோப்புப்படம் 
இந்தியா

விமான போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விமானங்களின் நடு இருக்கையில் பயணிகளுக்கு அனுமதி: பாம்பே உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

விமானங்களில் நடு இருக்கை பயணத்துக்கு அனுமதி அளிப்பதாகவும் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் பாம்பே உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விமானங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க, நடு இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், இது விமான நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நடு இருக்கை பயணிக்கு (மூன்று பயணிகள் அமரும் வரிசையில்) அனுமதி அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதை எதிர்த்து ஏர் இந்தியா விமான பைலட் தேவன் கனானி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை காலியாக விடுவதற்கு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஜே.கதாவாலா மற்றும் எஸ்.பி.தவதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதுஅவசியம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம். இதன் காரணமாகவே விமானங்களில் நடு இருக்கையை காலியாக விடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதேசமயம் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு நடு இருக்கை பயணிக்கு முழுமையான கவச உடை (டிஜிசிஏ வகுத்த விதிகளின்படி) அளிக்கப்பட வேண்டும். முழுமையான முகக் கவசமும் அளிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழுவாக பயணிப்போருக்கு நடு இருக்கையை ஒதுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் விமானங்களில் நடு இருக்கையில் பயணிகள் அமர வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் டிஜிஜிசிஏ விதிமீறல் ஏதும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேவைக்கேற்ப முடிவு

இது தொடர்பாக விமான அமைச்சகத்தின் உயர் நிலைக் குழு கூடி இது குறித்து முடிவு செய்யலாம். நடு இருக்கையில் பயணிகளை அனுமதிப்பது அல்லது காலியாக விடுவது குறித்து தேவைக்கேற்ப, வைரஸ் பரவலின் தன்மைக்கேற்ப முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT