ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவி, கரோனா வைரஸ் பரவலின் முக்கிய கேந்திரமாக இருந்து, வைரஸைக் கட்டுப்படுத்தியதில் தற்போது முன்னுதாரணமான பகுதியாக மாறி உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவியும் மும்பையில்தான் உள்ளது.
கரோனா வைரஸ் பரவலின் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற அளவுக்கு தாராவி சென்றது. ஆனால் வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள்முழு ஊரடங்கு கடைபிடித்ததும், பரிசோதனைக்கு பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகள் மூலம் தாராவியில் இப்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு தாராவி ஒரு ‘மாடல்’ பகுதியாக விளங்குகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்துதாராவியில் 47,500-க்கும் மேற்பட்டகுடிசைகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்ற பரிசோதனைகளை நடத்தி உள்ளனர். ஏறக்குறைய 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தாராவி மக்களுக்கு அதிகாரிகள் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அவசரசிகிச்சை அளிக்க அந்தப் பகுதியிலேயே ‘கிளினிக்’ அமைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருந்தவர்கள், உடனடியாக அருகில் உள்ள பள்ளி மற்றும் விளையாட்டு கிளப்புகளில் உருவாக்கப்பட்டிருந்த தனிமை மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் மே மாதம் முதல் வாரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்தது. அத்துடன்சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தாராவியில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும்பொறுப்பு, மும்பை மாநகராட்சியின் உதவி ஆணையர் கிரண் திகாவ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘தாராவியில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது முடியாத செயல். நெருக்கமான குடிசைகள், 100 சதுர அடி கொண்ட ஒரு சிறிய குடிசையில் ஏழு அல்லது எட்டு பேர் வாழும் நிலை. எனவே, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம்மைநாடி வருபவர்களுக்காகக் காத்திருக்க முடியாது. அதற்காக கரோனாவை தேடிச் சென்று துரத்தும்திட்டத்தை வகுத்தோம். அதன்படி, தாராவி குடிசைகளுக்கே சென்றுபரிசோதனைகளை ஆரம்பித்தோம். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தோம்’’ என்றார்.
கரோனா பரவத் தொடங்கி தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் திகாவ்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தி உள்ளனர். தினமும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தினர். இதன்மூலம் வைரஸ்பாதிப்பு தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக குறைக்கப்பட்டது.
தாராவியில் தினமும் 60 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த எண்ணிக்கை 20-க்கும் குறைவாக காணப்படுகிறது. அதேபோல் மும்பையின் மற்ற பகுதிகளை விட, தாராவியில் குணமடைந்தோரின் சதவீதமும் அதிகமாக உள்ளது.
மும்பையின் மற்ற பகுதிகளில் தொற்று அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறைவாகக் காணப்பட்டனர். நிலைமை முற்றியவுடன் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், தாராவியில் அறிகுறி தெரிந்தவுடன் அவர்களை தனிமைப்படுத்தினோம். அதன் மூலம் வெற்றி பெற்றோம் என்று உதவி ஆணையர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. தாராவியில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கின்றனர். ரம்ஜான் நோன்பு காலத்தில் தனிமை மையங்களில் இருந்தவர்கள், தங்கள் மத கடமைகளை செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கிய போது, ரம்ஜான் நோன்பிருந்தவர்களுக்கு மாலை வேளையில் பழங்கள், பேரிச்சம் பழம் போன்றவற்றை வழங்கி உள்ளனர்.
தனிமை மையங்களில் இருந்த தாராவி மக்களை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணித்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் மூலம்அதிகாரிகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
‘ஹாட் ஸ்பாட்’ என்ற நிலையில்இருந்து தற்போது ‘மாடல்’ பகுதியாக தாராவி மாறி உள்ளது. எனவே, தாராவியை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பரிசோதனைகளை அதிகரித்து, அறிகுறி உள்ளவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று டெல்லியைச் சேர்ந்தமக்கள் சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராமன் வலியுறுத்தி உள்ளார்.