காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப் படம். 
இந்தியா

அறியாமையைவிட அகங்காரம் ஆபத்து: வரைபடம் வெளியிட்டு மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கரோனா பரவல் குறைந்ததற்குப் பதிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிட்டார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில முதல்வர்களுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கான வளைகோட்டைச் சாய்த்துவிட்டதாக மத்திய அரசை விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழி ஒன்றைக் குறிப்பிட்டும், கரோனா லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மோசமாக வீழ்ச்சி அடைந்தது குறித்தும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வரைபடம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த வரைபடத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. அதேசமயம் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது என்பதை வளைகோடு காட்டுகிறது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “லாக்டவுன் இதைத்தான் நிரூபிக்கிறது. ஒரே விஷயம்தான், அறியாமையைவிட அகங்காரம் மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட வரைபடத்தில் ஒவ்வொரு லாக்டவுனிலும் கரோனா வைரஸ் வளைகோட்டை அல்லது பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சரிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த வரைபடத்தில் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட லாக்டவுனில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 90 அளவுக்குச் சென்றதைக் காண முடியும். அதேசமயம், மார்ச் முதல் வாரத்திலேயே கரோனா பாதிப்பு 100 முதல் ஆயிரம் வரை வந்துவிட்டதையும் காட்டுகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடக்கத்தில் ஆதரித்தனர். ஆனால், லாக்டவுனால் கரோனா குறைவதற்குப் பதிலாக நோயை அதிகப்படுத்தும் என்று உணர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றினர்.

கடந்த வாரம் இரு வரைபடங்களை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். அதில் ஒரு வரைபடத்தில் லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். அந்த வரைபடத்தில் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் லாக்டவுனை எவ்வாறு நடைமுறைப்படுத்தி கரோனா பாதிப்பைக் குறைத்தன, மத்திய அரசு எவ்வாறு கையாண்டது என்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

மற்றொரு வரைபடத்தில் மத்திய அரசு செயல்படுத்திய 4 கட்ட லாக்டவுனையும் வரைபடம் மூலம் ஒப்பிட்டு ஒவ்வொரு வரைபடத்திலும், கரோனா பாதிப்பு ஒவ்வொரு லாக்டவுனிலும் எவ்வாறு உயர்ந்து வந்தது என்பதைக் குறிப்பிடும் வகையில் அமைந்திருந்தன.

ட்விட்டரில் இந்த வரைபடத்தை வெளியிட்ட ராகுல் காந்தி அதில் குறிப்பிடுகையில், “வெவ்வேறு விதமான முடிவுகளை எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தைச் செய்வது பைத்தியக்காரத்தனம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT