பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களை பிரதமர் மோடி சுட்டிக் காட்டிப் பேசுவார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாக இன்னும் 2 வாரங்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக உங்கள்எண்ணங்களையும் சிந்தனைகளையும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருங்கள். அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகளை கேட்கவும் பதிவுகளை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன். நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு எதிராகநடைபெறும் போர் குறித்த பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்.
1800-11-7800, நமோ செயலி,MyGov Open Forum ஆகிய தளங்களில் உங்கள் சிந்தனைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைகளே மனதின் குரல் நிகழ்ச்சியின் பலம். 130 கோடி இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக மனதின் குரல் மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.