இந்தியா

ரயில், விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இல்லை- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

பெங்களூருவில் உள்ள மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தை சேர்ந்த அனிவார் அரவிந்த் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “உள்ளூர் விமானம் மற்றும் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்வது தொடர்பான சட்டப்பூர்வமாக எந்த ஆணையும் வெளியிடவில்லை. அதே வேளையில் இந்த செயலிஅரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்யாத பய‌ணிகளை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் கட்டாயப்படுத்தி பதிவிறக்கம் செய்ய வைக்கிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்''என கோரி இருந்தார்.

இவ்வழக்கு வெள்ளிக்கிழமை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.பி.நரகுந்த் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அதில், “ரயில், விமானத்தில் பயணம் செய்வோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை. இந்த செயலியை பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய உறுதி மொழி கடிதத்தை தரலாம்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ், மத்திய அரசின் வழக்கறிஞர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி இவ்வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT