காஷ்மீரின் குல்காம் மாவட்டம் நிபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நேற்று அதிகாலையில் அப்பகுதிக்கு சீல் வைத்து ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கிதுப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு வீரர்களும் திருப்பி சுட்டனர்.
நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
விசாரணையில் பெண் தீவிரவாதி
இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதக் குழுவினருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹத்மாவட்டம் மலயாபூர் கிராமத்தைச் சேர்ந்த தானியா பர்வீன் (22) கடந்தமார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தப் பெண், இந்திய ராணுவ வீரர்களை பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் மயக்கி தன் வசப்படுத்தி ரகசியங்களைப் பெற முயற்சி செய்திருக்கிறார்.
தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அந்தப் பெண்ணை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.