மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.
பத்திரிகை செய்தியின் அடிப்படையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தவழக்கு நீதிபதி அசோக் பூஷண்தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விலங்குகளைவிட மோசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்கள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஓர் உடல் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத்தகவல் மிகவும் வருத்தமளிப்பதாகவும் மோசமானதாகவும் உள்ளது.மேலும் டெல்லியில் தினமும்கரோனா வைரஸ் பரிசோதனைசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, அரசு மருத்துவமனைகளின் நிலவரம் குறித்து டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.