இந்தியா

பிஹாரில் இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி 2 பேர் காயம் 

அமர்நாத் திவாரி

பிஹார் சிதமார்ஹி மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில் நேபாள போலீஸ் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகி 2 பேர் காயமடைந்துள்ளனர்.

பலியானவர் பெயர் விகேஷ் குமார் ராய், வயது 25, காயமடைந்த உமேஷ் ராம், உதய் தாக்குர் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லகான் ராய் என்பவரை இது தொடர்பாக கைது செய்திருப்பதாக நேபாள் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறும்போது, லால்பந்தி-ஜான்கி நகர் எல்லைப் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது துப்பாக்கிச் சூட்டில் ராய் பலியானார்.

சிதமார்ஹி போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார், காயமடைந்த 2 பேர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளனர்” என்றார்.

ஆனால் இந்தச் சம்பவத்துக்கும் இந்திய-நேபாள நாட்டுக்கிடையேயான சமீபத்திய எல்லைப் பிரச்சினைக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று காவலதிகாரி அனில் குமார் தெரிவித்தார்.

பிஹார் தலைமை ஆய்வாளர் சஞ்சய் குமார் கூறும்போது, “இந்தச் சம்பவம் நேபாள ஆயுதம் தாங்கிய போலீஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ந்தது. இதில் நேபாள் போலீஸ் சுட்டதில் ஒருவர் பலியாக, இருவர் காயமடைந்தனர்” என்றார்.

இந்தச் சம்பவத்தை ஏடிஜிபி ஜிதேந்திர குமார் உறுதி செய்தார். பலியான விகேஷ் குமார் ராயின் தந்தை நாகேஸ்வர ராய் கூறுகையில் இந்த விவசாய நிலம் நேபாளில் உள்ள நாராயண்பூர் பகுதியில் உள்ளது. இங்குதான் தன் மகன் வேலை செய்துவந்ததாக தெரிவித்தார்.

இந்தியாவும் நேபாளமும் 1,850 கிமீ திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அப்பகுதிக்குச் சென்று பணியாற்றி விட்டு திரும்புவதும் குடும்பம் தொடர்பாக அங்கு செல்வதும் மிகவும் இயல்பான ஒன்று, இந்தப் பகுதி எல்லையில் இருப்பவர்களுக்கும் அந்தப் பகுதியில் எல்லையில் இருப்பவர்களுக்கும் இடையே திருமண உறவுகளும் உண்டு என்ற நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சமப்வம் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT