இந்தியா

பணம், சொத்து விவகாரமே காரணம் என சந்தேகம்: ஷீனா கொலை வழக்கு சிபிஐக்கு திடீர் மாற்றம் - மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

பிடிஐ, ஐஏஎன்எஸ்

மர்மம் விலகாமல் புதிராக இருக்கும் ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மும்பை போலீஸார் இதுவரை நடத்திய விசாரணையில், பணம், சொத்து விவகாரமே கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாவது மனைவி இந்திராணி.

அசாமை சேர்ந்த இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த் தாஸ். இத்தம் பதிக்கு ஷீனா போரா, மைக்கேல் போரா என இரு குழந்தைகள் பிறந்தனர்.

சில ஆண்டுகளில் முதல் கணவரிட மிருந்து பிரிந்த இந்திராணி கொல்கத்தா வைச் சேர்ந்த சஞ்சீவ் கன்னாவை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு வித்தி என்ற பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் மூன்றாவதாக பீட்டர் முகர்ஜியை இந்தி ராணி திருமணம் செய்து கொண்டார். அப்போது தனது முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை களை தன்னுடன் பிறந்த சகோதர, சகோதரி என்று பீட்டர் முகர்ஜியிடம் அறிமுகம் செய்தார்.

இந்தப் பின்னணியில் கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி ஷீனாபோரா மர்மமான முறையில் மாயமானார். அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக அனைவரையும் இந்திராணி நம்ப வைத்தார்.

இதில் திடீர் திருப்பமாக பெற்ற மகளை இந்திராணியே கொலை செய்திருப்பது அண்மையில் தெரியவந்தது. அவரது 2-வது கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். மும்பை புறநகர் பகுதியில் ஷீனா போராவின் உடலை மூவரும் சேர்ந்து எரித்திருப்பது டிஎன்ஏ சோதனையில் உறுதியாகி உள்ளது.

மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கை மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷியாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர் களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கு விசா ரணையை தலைமையேற்று நடத்திய போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கடந்த 8-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக அகமது ஜாவித் நியமிக்கப்பட்டார். இவர் பீட்டர் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு களில் இருந்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.

சிபிஐ-க்கு மாற்றம்

இதையடுத்து வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறு வதற்கு ஏதுவாக ஷீனா போரா வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப் படுகிறது என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக் ஷி மும்பையில் நேற்று வெளி யிட்டார்.

ஷீனா போராவும் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜியும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். முறை தவறிய இந்த உறவால் ஷீனா போரா கவுரவ கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்று முதலில் நம்பப்பட்டது.

ஆனால் மும்பை போலீஸார் இதுவரை நடத்திய விசாரணையில், பணம், சொத்து விவகாரங்கள் காரணமாகவே கொலை நடந்தி ருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படு கிறது.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக் ஷி கூறிய போது, பண விவகாரமே ஷீனாபோரா கொலைக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது. எனினும் இதுதொடர்பான ஆதாரங்களைத் திரட்ட மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அந்தப் பணியை சிபிஐ மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

சிபிஐ விசாரணையில் ஷீனா போரா கொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT