நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே இந்தியா முழுவதும் விவசாயம் செழிக்க ஆதாரமாக இருக்கிறது.
இந்த சூழலில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. தென்மேற்குப் பருவமழை ஜூலை 15-ம் தேதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமடையும் என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் நாட்டின் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் ‘‘நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். கொங்கன், கோவா பகுதிகளில் மிக மிக கடுமையான மழை பெய்யும்.
மகாராஷ்டிராவின் மத்திய பகுதி, மரத்வாடா, ஆந்திர கடலோர பகுதி, கர்நாடகாவின் உட்பகுதி, சத்தீஸ்கர் விதர்பா, தெலங்கானா, அசாம், மேகலாயா ஆகிய மாநிலங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும்.’’ எனக் கூறியுள்ளது.