மத நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் இந்தியாவின் மரபணுவில் ஊறியுள்ளன. இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் மத, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. இந்த விவகாரத்தில் யாருடைய சான்றும் தேவையில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
மத சுதந்திர விவகாரத்தில் இந்தியாவில் நிகழும் சம்பவங்கள் அமெரிக்காவை கவலை அடையசெய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அலுவலக உயர் அதிகாரி தெரிவித்திருந்தார். இதுபற்றி கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினரின் சமூக, மத, அரசமைப்பு சட்ட உரிமைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளன.அரசியல்ரீதியாக சகிப்பின்மையற்ற சிலர் நாட்டில் சகிப்பின்மையையும் அச்ச உணர்வையும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.
சிறுபான்மையினத்தை (பவுத்தமதம்) சேர்ந்த எனது கருத்து சிறுபான்மையினருக்கு சிறப்பான நாடு இந்தியாதான். இதுபற்றி யாரும் சான்று தர அவசியம் இல்லை. இந்தியாவின் மரபணுவில் ஊறியது சகிப்புத்தன்மையும் மத நல்லிணக்கமும்.
இவ்வாறு கிரண் ரிஜிஜு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உத்தரவின்படி தயாரிக்கப்பட்ட 2019 சர்வதேச மத சுதந்திரம் பற்றிய அறிக்கையை, அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டது. உலக நாடுகளில் மத சுதந்திரத்துக்கு விரோதமாக நடைபெறும் செயல்கள் இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அண்மையில் வெளியிட்டார்.