பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்களில் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இவ்வாறு வழங்கி வருகிறது. எனினும் இவை பெரும்பாலும் மிகச் சிறிய அளவில் இருந்தன.
இந்நிலையில் காஷ்மீர் மாணவர்கள் 1,600 பேருக்கு இனி கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம் மற்றும் இன்ஜினீயரிங் படிப்பதற்கு சுமார் 150 காஷ்மீரிகள் பதிவு செய்துள்ளதாக காஷ்மீர் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விண்ணப்பதாரர்களுக்கு ஹுரியத் மாநாடு போன்ற பிரிவினைவாத அமைப்புகள் அல்லதுஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாஹுதீன் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் பரிந்துரை தேவைப்படுகிறது. காஷ்மீர் இளைஞர்களிடம் தீவிரவாத எண்ணங்களை விதைத்து அவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் பாகிஸ்தான் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த உதவி வழங்கப்படுகிறது. படிப்பதற்காக வாகா - அட்டாரி எல்லைச் சாவடி வழியாக எல்லையை கடந்த செல்லும் காஷ்மீரிகள், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் தீவிரவாதிகளாக ஊடுருவும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.
மாணவர் விசா பெற்று பாகிஸ்தான் செல்லும் காஷ்மீர் இளைஞர்களில் பலர், தீவிரவாதிகள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகளின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களாக இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே இம்ரான் கான் திட்டத்தின் கீழ் காஷ்மீரிகள் பாகிஸ்தான் செல்ல இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அனுமதி மறுத்துவிட்டன.