கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த நிலையில் அது தொடர்பான சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதத்தில் இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அதேசமயம் உலக சுகாதார மையமும் இந்த மருந்து குறித்து ஆய்வு முடிவுகள் வந்த பிறகு கரோனா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஐபிசிஏ மற்றும் கெடிலா ஆகிய 2 நிறுவனங்கள் இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்கின்றன. இதில் ஐபிசிஏ நிறுவனப் பங்கு 1.2 சதவீதம் இறக்கம் கண்டது. கெடிலா நிறுவனப் பங்கு ஒரு சதவீதம் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.
மார்ச் 22 முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு மாதம் முடிந்து மூன்றாவது மாதமாக ஊரடங்கு தொடரும் நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.