இந்தியா

கரோனா சமூகப்பரவல் இல்லை என்று கூறுவது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல் உள்ளது: எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் விளாசல்

இரா.முத்துக்குமார்

இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் பாதிப்பு 9 ஆயிரத்து 996 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது:

இந்தியா அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை. அதற்கான சூழல் இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் பரவும் வேகமும், பாதிப்பின் அளவும் மிக குறைவாகவே உள்ளது.

15 மாவட்டங்களில் 0.73 சதவீத மக்கள் மட்டுமே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை பலன் அளித்துள்ளதையே இது காட்டுகிறது. ஊரடங்கால் கரோனா வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.

ஆனால் மாறாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.சி.மிஸ்ரா தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுவதோ இதுதான்:

சமூகப்பரவல் இல்லையென்றால் நாம் ஏன் நாளொன்றுக்கு 10,000 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறோம்? இது சமூகப் பரவல் இல்லையென்றால் இந்த எண்ணிக்கை எங்கிருந்து வருகிறது? சமூகப்பரவல் இல்லை என்று கூறினால் நான் என் கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று கூறுவது போல் உள்ளது. உண்மையை மறைப்பதில் பயனில்லை.

வெளிநாடுகளிலிருந்து யாரும் வரவில்லை. சமூகப்பரவல் என்று ஏன் கூறுகிறோம் எனில் எந்தத் தொடர்பிலிருந்து வந்தது என்பதை தடம் காண முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சமீபத்தில் மருத்துவர்கள், இவர்களின் உறவினர்கள் உட்பட 400 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பாதிபேர் தங்களுக்கு மருத்துவமனையிலிருந்து தொற்று பரவவில்லை, வெளியிலிருந்துதான் பரவியது என்று கூறுகின்றனர். வெளியிலிருந்து தொற்றுகிறது என்றால் சமூகப்பரவல்தான். இவர்கள் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை.

கரோனா அதிபாதிப்பு ஹாட்ஸ்பாட்களில் நாம் ஏப்ரல் மாதம் முதலே நோய் எதிர்ப்பாற்றலுக்கான ‘ஆன்ட்டிபாடி’ சோதனைகளைச் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மூலம் கரோனா பாசிட்டிவ்களை உறுதி செய்திருக்க வேண்டும். இப்போது சோதனைகள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும், துரிதப்படுத்தப்பட வேண்டும்.

என்று அந்தப் பேட்டியில் டாக்டர் எம்.சி.மிஸ்ரா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT