இந்தியா

குதிரை பேரத்தை நடத்தவே மாநிலங்களவைத் தேர்தல் தாமதம்: பாஜக மீது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தாக்கு

செய்திப்பிரிவு

கர்நாடகா முடிந்தது, மத்தியப் பிரதேசம் முடிந்தது அடுத்தது புரோஜெக்ட் ராஜஸ்தான் போல் ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்தார்.

மேலும் இந்த குதிரைப் பேரங்களை செய்து முடித்து தனக்கு வலு சேர்ப்பதற்காகவே ராஜ்யசபா தேர்தல் 2 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“குஜராத், ராஜஸ்தானில் (எம்.எல்.ஏ.க்கள்) விற்பது, வாங்குவது இன்னும் முழுமையடையவில்லை” என்கிறார் அசோக் கெலாட்.

காங்கிரஸ் புதனன்று தங்கள் எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தானில் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றது.

“மாநிலங்களவைக்குத் தேர்தல் 2 மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் குஜராத், ராஜஸ்தானில் இன்னும் பேரம் முடியவில்லை. அதனால் தாமதப்படுத்தியுள்ளனர்.

குதிரைப் பேரத்தின் மூலம் எத்தனை நாட்கள் அரசியல் செய்ய முடியும்? வரும் காலத்தில் காங்கிரஸ் அவர்களுக்கு ஒரு பெரிய அடி ஒன்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மக்கள் அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். எம்.எல்.ஏ.க்கள் உடனான சந்திப்பு பலனளிக்கிறது, அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர்” என்றார்

காங்கிரஸ் கட்சி தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி கூறும்போது, “நம்பத் தகுந்த இடங்களிலிருந்து நான் கேள்விப்படுகிறேன், ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேலை நடைபெறுகிறது என்றும் எங்கள் ஆட்சியையும் கவிழ்க்க வேலை நடைபெறுகிறது என்றும் தெரிகிறது.” என்றார்.

காங்கிரஸை ஆதரிக்கும் 12 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறிவிட்டால் பாஜக தன் வேலைகளைத் தொடங்கி விடும் என்ற நிலையே ராஜஸ்தானில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT