டெல்லியில் ஜூலை 31க்குள் கரோனா தொற்று எண்ணிக்கை 5.5 லட்சத்தை எட்டும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகிறார், விஞ்ஞானிகளும் இதையே ஆமோதிக்கின்றனர். ஆனால் சுகாதாரத் துறை இன்னும் சமூகப்பரவல் இல்லை என்று மறுத்து வருகிறது, இது ஏன்? என்று ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, “மத்திய அரசு ஏன் சமூகப் பரவலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது? இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
டெல்லியில் உள்ள கோவிட்-19 தொற்று எண்ணிக்கையைப் பாருங்கள். கோவிட் பரவும் வேகத்தை வைத்து டெல்லி சுகாதார அமைச்சர் அறிக்கை தருகிறார். எங்கிருந்து பரவுகிறது, எப்படிப் பரவுகிறது? என்பது தெரியவில்லை, கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால் அது சமூகப்பரவல்தான்.
மத்திய அரசு எண்ணத்தின் அடிப்படை என்ன? ஏன் அவர்கள் சமூகப்பரவலை நம்பவில்லை? இதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ” என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா நாட்டின் தலைநகரில் சமூகப்பரவல் இருப்பதாகத் தெரிவித்ததை சத்யேந்திர ஜெயின் வெளியிட்டார். ஆனால் மத்திய அரசு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள், மாநில அரசு சொல்ல முடியாது, சமூகப்பரவல் என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். சமூகப்பரவல் என்பது ஒரு கலைச்சொல் மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுதான். தொற்றுநோய் பரவலில் 4 கட்டங்கள் உள்ளன, இதில் 3வது கட்டம்தான் சமூகப்பரவல்.
சமூகப்பரவல் என்று எப்படி கூறுகிறோம் என்றால் எங்கிருந்து தொற்று வந்தது என்று மூலம் அறியப்படாமல் இருப்பதே. பெரும்பாலான கரோனா தொற்றுக்கள் இப்போது அப்படித்தான் இருக்கின்றன. எங்கிருந்து தொற்றியது என்பது தெரியவில்லை, என்கிறார் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.