குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்தி வரும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டது. இம்முறை, பெண்கள் பெருமளவில் திரண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மேஷனா மாவட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் உள்துறை அமைச்சர் ரஜினி படேல். அவர் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கியதுமே கூட்டத்தில் கலந்திருந்த படேல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கைகளில் வைத்திருந்த தட்டை ஸ்பூன் மூலம் தட்டி பலத்த ஓசை எழுப்பினர். இதனால், அமைச்சரால் தொடர்ந்து பேச முடியவில்லை.
இதேபோல், வடக்கு குஜராத்தில் சபர்கந்தா மாவட்டத்துக்குச் சென்ற மாநில அமைச்சர் ராம்லால் வோராவை முற்றுகையிட்ட மக்கள் அவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
கடந்த வியாழக்கிழமை ஊஞ்சா, பதான் நகரங்களில் நலத்திட்டங்களை துவக்கி வைக்க வந்த பாஜக மூத்த தலைவர் புருஷோத்தமன் ருபாலாவை பெண்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால், போலீஸார் உதவியுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
குஜராத்தில், படேல் சமூகத்தினர் வாழும் பெரும்பாலான பகுதிகளில், ஊர் நுழைவுவாயிலேயே "எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து இடஒதுக்கீடு அளிக்கும்வரை அரசியல்வாதிகளே ஊருக்குள் நுழையாதீர்கள்" என எழுதப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஊஞ்சா நகரைச் சேர்ந்த ராகேஷ் படேல் என்ற இளைஞர் கூறும்போது, "படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். மக்கள் அனைவரும் இவ்விஷயத்தில் ஒற்றுமையாக இயங்குகின்றனர். அரசியல்வாதிகள் இனியும் காலம் கடத்த முடியாது" என்றார்.