இந்தியா

கரோனா தொற்று; ஐசிஎம்ஆர் பரிசோதனை: எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது

செய்திப்பிரிவு

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுமம் (ICMR) நடத்திய கரோனா தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், 5,991 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இத்துடன், நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,33,632. குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட முதன்முறையாக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் தற்போது 48.88 சதவீதமாக உள்ளது.

இதேபோல, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுமம் (ICMR) நடத்திய பரிசோதனைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று இது 50,61,332 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஐசிஎம்ஆர் 1,45,216 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. பாதிப்பு அடைந்தவர்களைக் கண்டறியும் சோதனையை ஐசிஎம்ஆர் தொடர்ந்து முடுக்கிவிட்டுள்ளது. அரசு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 590 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 233 ஆகவும் அதிகரித்துள்ளது( மொத்தம் 823).

மும்பை, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநகராட்சிகளின் சுகாதார அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும், கைகொடுத்து ஊக்குவிக்கவும் மத்தியக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இந்த நகரங்களில், இக்குழுக்கள் அடுத்த ஒரு வார காலத்தில் பார்வையிட்டு, கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள

பொது சுகாதார நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்தக் குழுக்கள் மாநில சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய தினசரி அறிக்கையை அளிக்கும். அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது பிரச்சினை இருந்தால், அந்தத் தகவலை அக்குழுக்கள் தெரிவிக்கும். மேலும், தங்கள் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அவை அறிக்கையாக அளிக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT