ஜம்மு காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 8 டாப் கமாண்டர்கள் உட்பட 22 தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈத் பண்டிகை முடிந்தவுடனேயே தீவிரவாதிகளின் தலைமைகளைக் குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொல்வது துரிதப்படுத்தப்பட்டன.
இஸ்லாமிக் ஸ்டேட் ஜம்மு காஷ்மீர் கமாண்டர் ஆதில் அகமது வானி, லஷ்கர் தீவிரவாதத் தலைமை ஷாஹின் அமகட் டோகர் ஆகியோர் மே 25ம் தேதி கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹித்தின் கமாண்டர் பர்வைஸ் அகமெட் பண்டித் மற்றும் ஜேஇஎம் கமாண்டர் ஷகீர் அகமெட் ஆகியோர் மே 30ம் தேதி வான்புரா கோல்காம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜேஇஎம் குரூப் கமாண்டர் ஆகிப் ரம்ஜான் வானி, மற்றும் அவனித்புரா ஜேஇஎம் கமாண்டர் முகமது மக்பூல் ஆகியோர் ஜூன் 2ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜூன் 3ம் தேதி பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்ட ஜேஇஎம் டாப் கமாண்டர் ஃபாஜி பாய், ஹிஸ்புல் டாப் கமாண்டர் மன்சூர் அகமட், ஜெஇஎம் கமாண்டர் ஜவைத் அகமட் ஸர்கர் ஆகியோர் புல்வாமாவில் ஜூன் 3ம் தேதி கொல்லப்பட்டனர்.
இதே போல் இஷ்பாக் அகமட், ஒவைஸ் அகமட் மாலிக் ஷோபியானில் ஜூன் 7ம் தேதி கொல்லப்பட்டனர். இதே என்கவுண்டரில் 3 ஹிஜ்புல் முஜாஹித்தின் கமாண்டர்களும் கொல்லப்பட்டனர்.
இதே ஜூன் 7 அன்று ஹிஸ்புல் செயல் கமாண்டர் உமர் மொய்தீன், லஸ்கர் டாப் கமாண்டர் ரயீஸ் அகமட் கான், சக்லைன் அகமட் வாகய், வகீல் அகமட், ஷோபியானில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த 18 பயங்கரவாதிகளுடன் மே 28ம் தேதி ரஜவ்ரியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதையும் சேர்த்து 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 88 தீவிரவாதிகள் 36 என்கவுண்டர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.