பாஜகவின் மத்திய தலைவர்களால் மத்தியப் பிரதேச ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்போடப்பட்டு ஜோதிர் ஆதித்ய சிந்தியா மூலம் இதனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டதற்கு ஆதாரமாகக் கருதப்படும் ஆடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குரல் போன்று ஒலிக்கும் ஆடியோ ஒன்று ம.பி.யில் பரவி வருகிறது, ஆனால் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த ஆடியோவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாக பதிவானதில், “அரசைக் கலைக்க வேண்டும் என்பது மத்திய தலைவர்கள் எடுத்த முடிவு. இல்லையென்றால் அது அனைத்தையும் சீரழித்து விடும்.
சொல்லுங்கள், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, துளசி சிலாவத் இல்லாமல் ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா? எனக்கு தெரிந்து வேறு வழி இல்லை” என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியதாகத் தெரிகிறது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா, துளசி சிலாவத் ஆகியோர் பிறகு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 22 பேர் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியதால் ம.பி.யில் கமல்நாத் தலைமை காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில் இந்த ஆடியோ குறித்து காங்கிரஸ் தலைவர் நரேந்திர சலூஜா கூறும்போது, “சிவராஜ் சிங் சவுகானே உண்மையைக் கூறிவிட்டார். கமல்நாத் அரசை காலைவாரி விட்டதில் பாஜக தலைவர்களுக்கு பங்கு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பாஜக மத்தியத் தலைமைதான் கமல்நாத் அரசை கலைக்க முடிவெடுத்ததும் இதன் மூலம் தெரியவந்துள்ளது” என்றார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக கடுமையாக மறுத்து வருகிறது.