கரோனா நோய் அறிகுறியில்லாதவர்களிடமிருந்து நோய் பரவுவது அரிதானதே என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்ததையடுத்து மக்களிடையே பரவும் பெருந்தொற்று நோய் நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் சிலர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது கரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் இந்தியா கவனத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறுகின்றனர்.
உலகச் சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்று நோய்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் திங்கள் இரவு கூறும்போது, “நோய் அறிகுறி இல்லாத தனிநபர் நோயை பரப்புவது அரிதானதே. எனவே நோய் அறிகுறி உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தி இவர்களுடன் தொடர்புடையவர்களை தடம் கண்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தாலே பரவலை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
வைரஸைச் சுமந்திருப்பவர்கள் ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் குறித்த தீவிர விவாதம் கடந்த மார்ச் மாதம் முதலே நடைபெற்று வருகிறது.
ஆனால் ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் செவ்வாயன்று உலகச் சுகாதார அமைப்பைச் சாடியது, காரணம் நோய் அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்றாளர்களை அது சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சாடியது. “ஆதாரங்களின்படி நோய் அறிகுறிகள் இல்லாதவர்களும் கரோனா இருந்தால் பரப்பக்கூடியவர்களே” என்று கூறியது.
மார்ச் மாதத்தில் இந்தியா இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற நோய்க்குறி குணங்கள் உடையவர்களை பரிசோதனை செய்தது. ஆனால் இப்போது மாநிலங்கள் பல மேலும் கடுமையான டெஸ்ட் முறைகளுக்குத் திரும்பியது.
இந்தியாவில் 100 நோயாளிகளில் 69 பேருக்கு கரோனா நோய்க்குறி குணங்கள் இல்லை சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் நோய்க்குறிகுணங்களுக்கு முந்தைய நிலை என்ற புதிய வகைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த புதிய வகையினத்தில் அசம்பாவிதமாக இவர்களுக்கு நோய்க்குறிகள் தென்படும், மாறாக நோய்க்குறிகளே இல்லாத கரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இந்த இருவருமே நோயைப் பரப்பக் கூடியவர்கள் என்பதில்தான் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன.
டாக்டர் கிரிதர் பாபு என்ற மக்கள் தொற்று நோய் நிபுணர் கூறும்போது, “உலகச் சுகாதார அமைப்பு இப்படி கூறுகிறது என்றால் நோய்க்குறிகுணங்கள் தென்படுவதற்கு முந்தைய நிலை, நோய்க்குறிகுணங்கள் இல்லாத கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் குறித்து அது ஆய்வைத் தொடங்க வேண்டும். ஏனெனில் இப்படியெல்லாம் கூறுவது யார் யாருக்கெல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டு என்ற பொதுச்சுகாதார முடிவைத் தீர்மானிப்பதாகும்”என்றார்.
இந்தியாவில் கரோனா இருந்து அறிகுறிகள் இல்லாதவர்கள் 28%-லிருந்து 68% வரை இருக்கலாம். கரோனா நோயுள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுப்பிடிப்பதில் 40% நோயாளிகளை நாம் கண்டுபிடிக்கவில்லை, என்கிறார் ஐசிஎம்ஆர் கழகத்தின் இயக்குநர் மனோஜ் முர்ஹேகர்.