பல கோடி மக்களின் மனம் புண்படும்படி நடிகர் சிவக்குமார் பேசியது தவறு என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்
காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதியில் அலிபிரி மலையடிவாரத்தில் சப்த கோ மந்திரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டியின் சொந்த செலவில் கட்டப்பட்டு வரும் இப்பணிகளை நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் சுப்பாரெட்டி, சேகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் சேகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கோ மந்திரம் பணிகள் இன்னமும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் முடிவடையும். அதன் பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு கோ பூஜை செய்து, கோ துலாபாரம் செலுத்தி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்
குள்ள 21 பசுக்கள், கன்றுகளுக்கு எடைக்கு எடை வெல்லம், சர்க்கரை, மாட்டுத்தீவனம் போன்றவற்றை பக்தர்கள் அளிக்கலாம்.
அச்சப்பட தேவையில்லை
மலைப்பாதை வழியாக அலிபிரியிலிருந்து செல்லும் பக்தர்களும் கோ பூஜையில் பங்கேற்று செல்லலாம். சென் னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பணியாற்றும் 30 பேருக்கு கரோனா தொற்று என வீண் புரளியை சிலர் பரப்பி வருகின்றனர். அங்கு அர்ச்சகர் மற்றும் கார் ஓட்டுநர் என 2 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி விட்டார். ஆதலால் பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’' என்றார்.
அவதூறு வழக்கு
நடிகர் சிவக்குமார் மீது அவதூறு வழக்கு பதிவானது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல கோடி பக்தர்களின் மனம் புண்படும்படி யார் பேசினாலும் தவறுதான். கடவுள் முன் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லை. அனைவரும் ஒன்றே.
ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு பல வகைகளில் நிதி உதவி, காணிக்கைகள், நன்கொடைகள் தேவைப்படுகிறது. இதனை செலுத்தி கோயில் வளர்ச்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி புரிபவர்களுக்கு முன்னுரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை தவறாக எண்ணிவிடக்கூடாது என்றார் சேகர் ரெட்டி.