கேரள மாநிலத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டன. மக்கள் கரோனா வைரஸ் அச்சத்தால் வெளியே செல்லாததால் இவை அனைத்தும் வெறிச்சோடியே காணப்பட்டன.
திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில் மிகச் சிலரே வந்திருந்தனர். உணவகங்களில் 50 சதவீதம் பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம் என அனுமதிக்கப்பட்டும் பெரும்பாலான உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலில் இன்று 300 பக்தர்கள் மட்டுமே (ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே) அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கோயிலுக்குள் வந்தவுடன் கைகளைச் சுத்தம் செய்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதேசமயம் திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோயில், பழவங்காடிகணபதி கோயில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், ஸ்ரீகண்டீஸ்வராஷிவா கோயில், அனுமன் கோயில் மூடப்பட்டிருந்தன. கோயிலுக்குள் வரும் பக்தர்களின் வயது, உள்ளிட்ட விவரங்கள் குறிக்கப்பட்டபின், தெர்மல் ஸ்கேனிங் முடிந்தபின்புதான் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றொரு புகழ்பெற்ற கோயிலான சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை முடித்து சான்றிதழைத் தாக்கல் செய்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் மாதப்பிறப்புக்காக நடை திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 10 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 1200 கோயில்கள் திறக்கப்பட்டாலும், நாயர் சமூகத்துக்கு உட்பட்ட பல கோயில்கள் திறக்கப்படவில்லை. அதேபோல கொச்சின், மலபார் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்களும் திறக்கப்பட்டிருந்தன.
கொச்சியில் தேவாலயம் இன்று திறக்கப்பட்டதும் 80-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபட்டனர். அதேசமயம், மார் தாமஸ் தேவாலயம், சிரியோ மலபார் தேவாலயம், லத்தின் டயோசிஸ் ஆகியவை வரும் 30-ம் தேதி வரை தேவாலயங்களைத் திறக்கவில்லை என அறிவித்துள்ளன. கோட்டயம் சிரியன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயக் குழுவினர் தேவாலயங்களைத் திறப்பது குறித்து இன்று முடிவு செய்கின்றனர்.
அதேபோல பெரும்பாலான மசூதிகள் அடைக்கப்பட்டிருந்தன. சில மசூதிகள் மட்டும் திறக்கப்பட்டு சமூக விலகலுடன் தொழுகை நடத்தப்பட்டது.
உணவகங்களில் பெரும்பாலும் மக்கள் கூட்டமின்றியே காணப்பட்டது. மக்கள் அமர்ந்து சாப்பிட ஆர்மின்றி, பார்சல் வாங்கிச் செல்லவே விரும்புகிறார்கள். உணவக உரிமையாளர்களும் பார்சல்கள் வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்