கரோனா லாக்டவுனால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களை அடுத்த 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் மீது லாக்டவுனை மீறியதாக பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைராஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுற்று வருகின்றனர்.
இந்தக் காட்சிகளையும், நடந்து செல்லும் நிகழ்வுகளையும், சைக்கிளில் செல்லும் சம்பவங்களையும் நாளேடுகள், தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தும், படித்தும் உணர்ந்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த மாதம் 26-ம் தேதி வழக்காகப் பதிவு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
''கரோனா லாக்டவுனால் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாக்டவுன் காலத்தில் அவர்கள் பொதுமுடக்கத்தை மீறியதாக அவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைத் திரும்பப் பெற வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் மாநில அரசுகள் அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. அவர்கள் ஊர்களுக்குச் சென்று சேரும் வரை தேவையான உணவு, குடிநீர் போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லத் தேவையான ஷ்ராமிக் ரயில்கள் தேவையானவற்றை மாநில அரசுகள் கோரிய அடுத்த 24 மணிநேரத்தில் ரயில்வே துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று சேர்ந்ததும் அவர்கள் குறித்த முழுமையான பட்டியலை மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள் தயாரித்து, அவர்கள் லாக்டவுனுக்கு முன்பு என்ன வேலை செய்திருந்தார்கள் என்பதைக் கேட்டறிந்து , அவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைபார்த்த இடத்துக்குத் திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் வழங்கிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் குறித்து மாநில அரசுகள் அவ்வப்போது அவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு விளம்பரம் செய்தல் வேண்டும்''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு வரும் ஜூலை மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.