உத்தரபிரதேசத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் உள்ளன. இதற்கான 75 ஆட்சியர்களை கண்காணிக்க 18 மண்டல அதிகாரிகளும் உள்ளனர். கரோனா பரவல்தடுப்பு சூழலில் இந்த அதிகாரிகளின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக புகார் எழுந்தன. இதற்கு அவர்களுக்கு கூடுதல் பணி பளுவால் இதை சமாளிப்பதில் எழுந்த சிரமம் காரணமானது.
இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிதாக 75 ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக சமீபத்தில் நியமித்திருந்தார். இவர்கள் பல்வேறு துறைகளில்இணை மற்றும் சிறப்பு செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள். இவர்களை துறைகளில் இருந்து பிரித்து அமர்த்தியதன் மூலம் 75 மாவட்டங்களிலும் கரோனா பரவல் கட்டுப்பாடு, அதன் மீதானஅரசு உத்தரவுகள், புலம் பெயர்ந்ததொழிலாளர்களின் புனர்வாழ்வு உள்ளிட்டவை நிறைவேற்றப்படுவதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மாநில அரசின் பொறுப்பு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “மாவட்டங்களில் கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து ஆட்சியர்களிடம் எடுத்துரைக்கிறோம். இதனால், அவர்களும் அதை சரிசெய்து ஒருங்கிணைப்புடன் பணியாற்றுகிறார்கள். இந்த ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் பிரச்சினைஎழுகிறது. தினமும் முதல்வர் அலுவலகம் மற்றும் வருவாய் துறைக்கு அளிக்கும் அறிக்கையால் நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.