டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தொண்டை வலி மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு நாளை கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களில் டெல்லி 3-வது இடத்தில் இருக்கிறது. இதுவரை அங்கு 27 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 761 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4-வது லாக்டவுனுக்குப் பின் டெல்லியில் கரோனா பரவல் வேகம் வேகமாக அதிகரித்து வருகிறது.
மே 8-ம் தேதிக்கு முன் டெல்லியில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 48 ஆக இருந்த நிலையில் கடந்த 11 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து 39 ஆகச் சரிந்துள்ளது. டெல்லியில் சமூகப்பரவல் வந்துவிட்டது என்று எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் கங்குலி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லியில் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை என்று புகார் எழுந்ததையடுத்து, டெல்லி அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பான ஆலோசனை நேற்று காலை நடந்தபோது முதல்வர் கேஜ்ரிவால் அதில் பங்கேற்றார். அதன்பின் நடந்த எந்த ஆலோசனையிலும் பங்கேற்கவில்லை. கரோனா வைரஸ் விவகாரம் தொடங்கியதிலிருந்து முதல்வர் கேஜ்ரிவால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்தபடியே காணொலி மூலமே ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததிலிருந்து உடல் சோர்வுடன் காணப்பட்ட கேஜ்ரிவால் தனக்குத் தொண்டை வலியும், லேசான இருமலும் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று மாலை மருத்துவர்கள் வந்து முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சையளித்தனர். அவருக்கு காய்ச்சல் இருப்பதையும், தொண்டை வலியும், கரகரப்பும் இருப்பதையும் உறுதி செய்து தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
டெல்லியில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் நாளை(செவ்வாய்க்கிழமை) கேஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை செய்வது அவசியம். அதுவரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்கெனவே தீவிர நீரிழிவு நோய் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நீரிழிவு நோய் அதிகரித்து அதற்காக தனியாக சிகிச்சையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.