இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு ஆதரவு குறைகிறது- ராணுவ உயர் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு கூறியதாவது:

வடக்கு காஷ்மீரில் சமீபத்திய ஒருங்கிணைப்படாத வன்முறைகள், தீவிரவாதிகள் விரக்திஅடைந்திருப்பதன் அறிகுறிகள் ஆகும். அவை மக்களின் பரிவைபெறவில்லை. வன்முறை சுழற்சியில் இருந்து மக்கள் விடுபட விரும்புகின்றனர். தீவிரவாத குழுக்களில் உள்ளூர் இளைஞர்கள் சேர்வது மிகவும் குறைந்திருப்பது இதைத் தெளிவாக காட்டுகிறது.பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளின் பொய் பிரச்சாரத்தின் உதவியுடன் மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்துவதே காஷ்மீர் தீவிரவாதத்தின் அடிப்படையாகும். இந்த தீவிரவாத செயல்களுக்கு மக்களிடையே ஆதரவு காணப்படவில்லை. மக்கள் அமைதியை விரும்புகின்றனர். காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கான ஆதரவு கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்டது.

வடக்கு காஷ்மீரில் சமீபத்தில் தீவிரவாத வன்முறைகள் நடந்திருந்தாலும் அங்கு தீவிரவாதிகள் அதிகம் இல்லை. 2018, 2019-ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2020-ல் தீவிரவாத்திற்கு உள்ளூர் இளைஞர்களை சேர்ப்பது பாதியாகவும் மற்றும் அதை விடவும் குறைந்துவிட்டது. தீவிரவாதிகள் தற்போது தங்களை தற்காத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர். விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் காஷ்மீர் இளைஞர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது. இவ்வாறு பி.எஸ்.ராஜு கூறினார்.

SCROLL FOR NEXT