இந்தியா

1962-ஐ விட இந்திய ராணுவம் இப்போது நவீனமடைந்துள்ளது; சீனாவுக்கு எதிராக மத்திய அரசு கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்:  பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல் 

ஏஎன்ஐ

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா கடினமான, கறாரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர், கேப்டன் அமரீந்தர் சிங் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதாவது பேச்சுவார்த்தைகளுக்கு சீனா ஒத்துவரவில்லையென்றால் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார் அமரீந்தர் சிங்.

இது தொடர்பாக வீடியோ செய்தியாளர்கள் சந்திப்பில் அமரீந்தர் கூறியதாவது:

இரண்டு இறையாண்மை பொருந்திய நாடுகளும் ராஜீய ரீதியாக இதற்கு தீர்வு காண வேண்டும். இந்தியா போரை விரும்பவில்லை, ஆனால் எல்லையில் சீனா தொடர்ந்து தொந்தரவு செய்வதையும் விரும்பவில்லை.

நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் அதற்காக எங்களை அவர்கள் தொந்தரவு செய்து கொண்டே இருக்க முடியாது. இந்தியப் பகுதியிலிருந்து சீனாவைத் தள்ளிப்போகச் செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் ராஜீய ரீதியாகவும் இதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், எல்லையில் சீனாவின் ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கு நாம் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்க முடியாது.

இப்போது அவர்கள் வந்துள்ள இந்தியப் பகுதியிலிருந்து அவர்களை பின்னுக்குத் தள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. 1962ஐ காட்டிலும் இந்தியா தனது ராணுவத்தை நவீனமயப்படுத்தியுள்ளது, இப்போது 1962-ஐக் காட்டிலும் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது. சீனா நம்மை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கூறியுள்ளார் அமரீந்தர் சிங்.

SCROLL FOR NEXT